சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஊரகப்பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோரும் 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 27 மாவட்டங்களுக்கான ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம்  டிசம்பர் 27,  30  ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெற்றுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. அதன்படி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 100 நாள் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், வாக்காளர் புகைப்பட சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவித்து உள்ளது.

இதுதொடர்பான சட்டபூர்வ ஆணையையும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறி உள்ளது.