உள்ளாட்சி தேர்தல்: தென்மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல்ஆணையர் நாளை ஆலோசனை

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆட்சியர்களுடன்  நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர்அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், உச்சநீதி மன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகஅரசு தள்ளப்பட்டு உள்ளது.

அதன்படி, அரையாண்டு விடுமுறை நாட்களான டிசம்பர் மாதம் 27, 28ந்தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையர், நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து,  நாளை மறுநாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் ஆட்சியர்களுடனும் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.