சென்னை:

புதியதாக தொடங்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, அந்த 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் இறுதியில் முதல்கட்டமாக ஊரகப்பகுதி களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங் களான 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை பணிகள் நடைபற்று வந்தன.

தற்போது,  வார்டு வரையறை பணிகள் முடிவடைந்து விட்டதால் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

9 மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் தயாராகி, சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

இதையொட்டி 9 மாவட்டங்களில் புதிதாக உருவான 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது நடைபெறும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.