மறுவரையறை பணிகள் முடிந்தபின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்! ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்!

சென்னை:

மிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டவழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு  இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தமிழகத் தின் மற்ற மாவட்டங்களில் முறையாக ஏற்பாடுகளைச் செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி “இன்றைய தீர்ப்பு என்பது அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடித்த பின்னர் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான். அப்போது நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தவேண்டும்.

அதனை விடுத்து புதிய 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தல் அறிவித்தால் அது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும். அனைத்து நடவடிக்கைகளையும் முடித்த பின்னரே தேர்தல் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க கோரி வந்தது. அதையேதான் உச்சநீதி மன்றமும் இன்று உத்தரவிட்டுள்ளது.

எனவே,  உள்ளாட்சி தேர்தலில் அரசு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அனைத்து மாவட்டங் களுக்குமான தொகுதி வரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை முடித்த பின்னர்தான் தேர்தல் அறிவிக்க வேண்டும்” என கூறினார்.

இதுபோலவே திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சனும் கூறியது குறிப்பிடத்தக்கது.