மும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..!

மும்பை: மராட்டிய தலைநகரில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்பட்டுள்ள நிலையில், மக்கள் நெரிசலற்ற நேரத்தில் பொதுமக்களுக்கான உள்ளூர் ரயில்களை இயக்கலாம் என்று அதிகாரிகள் முடிவுசெய்யும் சூழலில், நிலைமையை கட்டுக்குள் வைப்பது அனைத்தும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிவித்தல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை, மக்கள் முறையாக மற்றும் தவறாமல் கடைப்பிடித்தால் மட்டுமே, அடுத்துவரும் நாட்களில் நோய் பரவல் கட்டுக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையே அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்தால், ரயில் சேவைகளை மேலும் அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், உள்ளூர் ரயில் சேவைகளை மும்பையில் இந்தச் சூழலில் மீண்டும் தொடங்குவதானது நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்ற கருத்தும் வலுவாக உள்ளது.

அதேசமயம், அனைத்துமே மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை அவர்கள் முறையாக கடைப்பிடித்தால் பிரச்சினையில்லை என்ற கருத்து கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், மக்களின் பொருளாதார வாழ்க்கையை காக்க வேண்டுமெனில், ரயில் சேவைகளை எப்படியேனும் மீண்டும் தொடங்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.