உள்ளாட்சி மறுவரையறை விவரங்கள் அரசிதழில் வெளியீடு! தேர்தல் எப்போது?

சென்னை:

மிழகம் முழுவதும் புதியதாக வரையறை செய்யப்பட்ட வார்டுகள் விவரம் குறித்து ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி வார்டு மறு வரையறை விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. விரைவில் தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வார்டு வரையறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவடைந்து, தேர்தல் நடத்தலாம் என்று உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றங்கள் அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்,  124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளுக்கான வார்டு வரையறை விவரங்கள் அரசிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியின் வார்டு மறுவரையறை விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு வார்டுகளுக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சிகளில் தேர்தல் நடைபெறாத நிலையில், அதற்கான நிதியையும் மத்தியஅரசு ஒதுக்க மறுத்து வருகிறது. இதன் காரணமாக உள்ளாட்சி பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வரும் நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.