மே மாதம் 3 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தொடரவேண்டாம் : தொற்று நோய் நிபுணர்கள் கருத்து.

மும்பை

ந்தியாவில் மே மாதம் 3 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் தொடரத் தேவையில்லை என இரு தொற்று நோய் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவுதலைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவுதல் குறையாததால் மத்திய அரசு தேசிய ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்தது.  ஆயினும்  கொரோனா தாக்குதல் குறையாமல் உள்ளது.

தற்போதுநீட்டிக்கப்ப்ட்ட  ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்தில் முடியும் நிலையில் உள்ளது.  எனவே ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  சுகாதார ஆர்வலர்கள் அரசின் இந்த கடும் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும்  இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் தொடர்வதன் மூலம் கொரோனா பரவுதலை முழுவதுமாக அழித்து விட முடியும் எனவும் கூறி வருகின்றனர்.

தொற்று நோய் நிபுணர்களான ஜெயப்பிரகாஷ் முலியல் மற்றும் ஜாகப் ஜான் ஆகிய இருவரும் தொழுநோய் அழிப்பு மற்றும் போலியோ மருந்து நிகழ்வு ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தவர்கள் ஆவார்கள்.   இவர்கள் இருவரும் தற்போது ஊரடங்கை முடித்துக் கொள்ளச் சரியான நேரம் எனத் தெரிவிக்கின்றனர்.  மேலும் இவர்கள் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது என்பது எலியைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவதற்குச் சமம் என கூறுகின்றனர்.

இது குறித்து ஜெயப்பிரகாஷ் முலியல், ”சிறிது காலத்துக்கு முதியோர்களை வெளியில் எடுத்து வராமல் இருக்க வேண்டும்.   அவர்களை கொரோனா எளிதில் தொற்றும் என்பதால் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தனிமையில் வைக்கப்பட்டு இளைஞர்களைப் பணி செய்ய அனுமதிக்கலாம்.    அவர்களில் ஒரு சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் போதுமான மருத்துவமனைகள் உள்ளன.

எனவே இறப்பு விகிதம் வெகுவாக குறையும்.  மேலும் இதன் மூலம் நாம் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும்.  நோய்த் தொற்று வளர்வதைப் போல் எதிர்ப்புச் சக்தியும் கூடவே வளரும். தற்போதைய நிலையில் அரசு மருத்துவமனைகள் எண்ணிக்கையை அதிகரித்தால் போதுமானது,” எனத் தெரிவித்துள்ளார்.  இந்த முழுமையான ஒழிப்பு என்பது ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனால் முயன்று வருவதாகும்

ஜாகப் ஜான், “ஊரடங்கு என்பது நேரத்தை நிறுத்தி வைக்கும் ஒரு நடவடிக்கையாகும்.  இது நேரத்தை உறைய வைத்து மீண்டும் ஊரடங்கை ரத்து செய்யும் போது நாம் எங்கு நிறுத்தினோமோ அங்கிருந்து தொடரும்.    குறைந்த காலத்துக்குப் பாதிப்பைக் குறைக்க மட்டுமே ஊரடங்கு உதவும்.   அதற்குள் நாம் கொரோனாவை எதிர்க்கும் வசதிகளைத் தேவையான அளவுக்கு அதிகரிக்க வேண்டும்.  இரண்டு வாரத்தில் முடியாதது நான்கு வாரங்கள் ஆனாலும் முடியாது.” எனத் தெரிவித்துளர்.

மற்றொரு தொற்று நோய் நிபுணரான கிரிதர பாபு, “ஊரடங்குக்கு முந்தைய நிலையை விட தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.  இது ஊரடங்கு விதிகள் கடுமையாகப் பின்பற்றியதன் விளைவாகும்.   முழுமையான ஒழிப்பு என்பது சொல்ல அளவில் சரியாக வருமே தவிர தற்போதுள்ள நிலையில் அது சாத்தியம் இல்லை.    தற்போது கொரோனா சுமை வெகுவாக குறைந்துள்ளது.   ஊரடங்கை ரத்து செய்தால் சுமை அதிகரிக்கலாம் “ எனத் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன.  தற்போதைய நிலையில் இந்தியப் பொருளாதார சரிவு மிகவும் கீழ்நோக்கிச் செல்வதால் மோடி ஊரடங்கை ரத்து செய்தாலும் கடுமையான விதிகள் தொடரலாம் என கூறப்படுகிறது.