மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், மாநிலத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், மீட்டும் ‘லாக்டவுன்’ போடும் நிலை ஏற்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்ந்து வருகிறது.  நேற்று மட்டும் 6971 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 21லட்சத்து 884 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையில் 52,956 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.  இதனால் கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், சோதனைகளை அதிகப்படுத்தவும் மத்தியஅரசு மாநில அரசை  அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  மகாராஷ்டிரா மாநில முதல்வர்  உத்தவ் தாக்கரே தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடம் பேசினார். அப்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சில நாட்களுக்கு அரசியல் போராட்டம் மற்றும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்டுவதாக கூறினார். மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன்  தீர்வாக இருக்க முடியாது. ஆனால்,  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த  ஊரடங்கு மட்டுமே வழியாக உள்ளது.

தொற்று பரவலில் இருந்து நம்மை காக்கும் ஆயுதம்  முககவசம் மட்டும்தான். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் ஆகியவை தான் ஊரடங்கை தவிர்க்க உதவும்.

மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு வராமல் இருப்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. தற்போது என்னுடைய கேள்வி எல்லாம், ஊரடங்கு அமலாக வேண்டுமா? அப்படி வேண்டாம் என்றால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுங்கள்.

முகக்கவசம் அணியுங்கள். கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவுங்கள். எல்லா இடங்களிலும் போதிய சரீர இடைவெளி விட்டுச் செல்லுங்கள். பொறுத்திருந்து பார்க்கலாம். யாருக்கு ஊரடங்கு வேண்டும். யாருக்கெல்லாம் ஊரடங்கு வேண்டாம் என்று. நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். மிகவும் கட்டுப்பாடுடன் இருங்கள். ஊரடங்கு அமலுக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக மக்கள் பின்பற்றாவிட்டால் அதன்பிறகு ஊரடங்கை அரசு அமல்படுத்திவிடும். ஆகையால் அனைவரும் சுய ஒழுங்குடன் செயல்படுங்கள்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார.