சென்னை: மார்ச் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய  லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தொடக்க காலத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டது.

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக குறைய, அதற்கேற்ப தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. இந் நிலையில், மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக் டவுன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையில் உள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்றும் பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்,தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.