சென்னை: தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வழியே பேசிய பிரதமர் மோடி, 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமானதாக இருக்கும் என்றார்.
தளர்வுகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி இருந்தார். 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், 4ம் கட்டமாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும், புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்துக்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று விமானம், ரயில், பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 100 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது.
தனிபயிற்சியாளர்களுடன் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். கல்வி நிலையங்கள் மே 31ம் தேதி வரை திறக்கப்படாது என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.