டெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி 7வது முறையாக நாட்டு மக்களிடம் காணொளி மூலமாக உரையாற்றினார். 12 நிமிடங்கள் பேசிய அந்த காணொளியில் அவர் கூறியதாவது: நாட்டில் லாக் டவுன் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால், வைரஸ் இன்னும் ஒழியவில்லை.
வரக்கூடிய பண்டிகை காலங்களில், சந்தைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோவிட் 19 இன்னமும் தொடர்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பலர் இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டார்கள். இது சரியல்ல.
நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், முகமூடி இல்லாமல் வெளியே சென்றால் நீங்களே, உங்கள் குடும்பம், உங்கள் குடும்பத்தின் குழந்தைகள், வயதானவர்களை மிகவும் சிக்கலில் ஆழ்த்துகிறீர்கள் என்று பொருள்.
உங்கள் அனைவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன், நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் உங்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பதை காண விரும்புகிறேன். திருவிழாக்கள் உங்கள் வாழ்க்கையை உற்சாகப்படுத்துவதைக் காண விரும்புகிறேன்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில், தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து, பின்னர் மீண்டும் உயர்வு கண்டுள்ளது. தடுப்பூசி உருவாக்கப்படும் வரை நாம் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும், கடினமாக இருக்கக்கூடாது என்றார்.