கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா 2ம் அலையின் இப்போதுள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியும். மக்களின் வலியை புரிந்து கொள்வதோடு அவர்கள் கஷ்டத்தில் நானும் பங்கேற்கிறேன். இது போன்ற சூழ்நிலையில் நாம் முன்கள பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டை போன்ற மோசமான நிலை தற்போது இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளுடன் மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகாரிக்க மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து பேசி வருகிறேன். இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும்.

நாட்டு மக்கள் நினைத்தால் கொரோனா இரண்டாம் அலையை முறியடிக்க முடியும். நாட்டில் தற்போது தேவை கூட்டு முயற்சிதான். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நாம் கட்டுப்பாடுடன் இருப்பதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய வேண்டும். லாக்டவுன் என்பது கடைசி ஆயுதமே. மாநில அரசுகள் அதை கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்.