சென்னை:

சென்னை நகரில் மட்டும்  ஊரடங்கை மீறியதாக இதுவரை 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆறே முக்கால் லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும்  கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மீறுபவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த 78 நாட்களில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 6.27 லட்சம் பேர் கைது செய்யப்ப்டடு உள்ளனர். அவர்களிடம் இருந்து  ரூ.12.14 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளன. சுமார்  4.66 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  5.81 லட்சம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

சென்னை நகரில் மட்டும் இதுவரை 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 65 ஆயிரத்து 101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 6 லட்சத்து 82 ஆயிரத்து 795 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் நேற்று (12–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 1248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 76 இருசக்கர வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகு ரக வாகனம் என மொத்தம் 95 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.