மதுரை:
“லாக்கப் டெத்” என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்று , இன்று  தென்மண்டல  ஐஜியாக பொறுப்பேற்ற முருகன் ஐபிஎஸ் கூறினார்.

தென்மண்டல ஐஜியாக பணியாற்றிவந்த சண்முகராஜேஸ்வரன் ஓய்வுபெற்றதை அடுத்து, புதிய தென்மண்டல ஐ.ஜி.யாக  தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முருகன், இன்று மதுரையில் ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தார். அதில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முருகன், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும்,  சாத்தான்குளம் சம்பவத்தில் நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அந்த சம்பவத்தை தொடர்ந்து சாத்தான்குளத்திற்கு சென்றுவந்தேன். மீண்டும் அங்கு செல்ல இருக்கிறேன்.
சிபிசிஐடி விசாரணைக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூறியவர், காவல்துறையில்  லாக்-அப் டெத் என்பதே நடக்கக் கூடாது.  எப்போதாவது நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் கலங்கம் ஏற்படுகிறது. அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீஸார் 48 மணிநேரத்தில் தானாகவே பணியிடை நீக்கமாவார்கள்.  தேவைப்படும்பட்சத்தில்  திருச்சியில் காவல்துறையினருக்கு மனநலப் பயிற்சி அளிக்கப்படுவது போல, தூத்துக்குடி காவல்துறையினருக்கும் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.