கிருஷ்ணகிரி :
வெட்டுக்கிளி கடந்த சில நாட்களாக இந்திய விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் பூச்சி.
இந்தியாவில் உள்ள விவசாயிகள் வெளிமாநிலத்தில் பஞ்சம் பிழைக்க சென்ற தங்கள் உறவுகள் தங்களை நாடி வர படும் வேதனையையும் துயரையும் ஒருபுறம் அனுபவிக்க.
பயிர்களை தாக்க கிளம்பி இருக்கும் வெட்டுக்கிளிகளுக்கு தங்கள் பயிர்களை பறிகொடுத்து படும் துயர் மறுபுறம் என்று துயரத்தில் வாழ்ந்துவருகின்றனர்.
இதுவரை, வடமாநிலங்களில் மட்டுமே அதிகளவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள், தமிழகத்தில் நுழைய வாய்ப்பே இல்லை என்று கூறிய மூன்றாவது நாளிலேயே தமிழக விவசாயிகளை வேதனை படுத்தும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி எனும் கிராமத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது.

கொரோனாவுக்கு மருந்து இருக்கிறதா என்பது பற்றி கவலைப்படாத விவசாயிகள் கூட தாங்கள் வைத்த பயிர் வீணாவதை பார்க்க முடியாமல் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு மருந்து இருக்கிறதா என்று தேடிவருகின்றனர்.
சிலர், உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும் நாள் முழுதும் வயலில் இறங்கி வாத்தியங்களை இசைத்து ஒலியெழுப்பியும், காய்ந்து போன மிளகாய்ச் செடிகளை எரித்து நெடியை கிளப்பியும், இந்த வெட்டுக்கிளிகளை விரட்டிவருகின்றனர்.
தமிழகத்தில், விவசாயம் பொய்த்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் பயிர் வைத்திருக்கும் சில விவசாயிகள், தங்கள் பயிர்கள் பச்சை கட்டும் நேரத்தில் பச்சை கட்டிய பயிர்களை அழிப்பதற்கென்றே கிளம்பி வந்திருக்கும் இந்த வெட்டுக்கிளிகளை பார்த்து மிரண்டுபோய் உள்ளனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் துயரை போக்கிய தமிழக அரசு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்திருக்கும் இந்த வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.