இந்தியாவில் உணவுபஞ்சத்தை ஏற்படுத்துமா வெட்டுக்கிளிகள்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மீள் பதிவு:

இந்தியாவை கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ஒருபுறம் ஆக்கிரமித்துள்ள நிலையில், மற்றொரு புறம், கண்ணுக்கு தெரியும் வெட்டுக்கிளிகள் கூட்டமும்  இந்தியாவை மிரட்டி வருகின்றன.  இது பொதுமக்களிடையே பல்வெறு சந்தேகங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை வடமாநிலங்களில் தனது பலத்தை நிரூபித்து வந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் தற்போது தமிழகத்திற்குள்ளும் புகுந்துள்ளது,  நமது விவசாய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரு  மாதங்களுக்கு முன்பே பாலைவன வெட்டுக்கிளிகள்  இந்தியா நோக்கி படையெடுக்கும் என ஐநா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவிலும் தனது பலத்தை காட்டி வருகின்றன.  விவசாய நிலங்களை  ஆக்கிரமித்து விவசாய பயிர்களை அடியோடு காலி செய்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டதிலும் அதன் ஆதிக்கம் பரவத்தொடங்கி உள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கால், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவு பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகளின் ஆதிக்கம் மக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தி விடுமோ என பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

வெட்டுக்கிளிகள்  என்பது ஒரு சிறிய பூச்சி இனம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதே வெட்டுக்கிளி கள் ஒரு நாட்டின் விவசாயத்தயே அழித்து, உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி விடும் என்பது மறுப்பதற்கில்லை… இதற்கு உதாரணம்  மடகாஸ்கர் நாடு.

வெட்டுக்கிளிகளுக்கு விவசாயிகளின் விரோதி என்று ஒரு சொல்லப்படுவதுண்டு. வெட்டுக்கிளிப் பட்டாளம் விளைநிலத்திற்குள் நுழைந்து விட்டால், ஒட்டுமொத்த பயிர்களையும் நாசம் செய்து விடும்.

ஒரு நாட்டின் உணவு பஞ்சத்துக்கு பல லட்சக்கணக்கில் பரவும் வெட்டுக்கிளிகள் காரணமாகவும் அமைந்து வடுகிறது.  இவைகள் ஒரு இடத்திலேயே இல்லாமல் தொடர்ந்து நீண்ட தொலைவிற்குப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் வெளியான காப்பான் திரைப்படத்திலும், வெட்டுக்கிளிகளின் அராஜகம், அதனால் விவசாயிகள் படும் அவஸ்தைகள், அவலங்கள் தெள்ளத்தெளிவாக காண்பிக்கப்பட்டு உள்ளது.

 

வெட்டுக்கிளிகளில் பல இனங்கள்  இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக, வெட்டுக்கிளிகள் ஆசியா, வட ஆபிரிக்கா, ஐரோப்பாவிலேயே அதிக அளவில் வாழ்வதாகவும், சஹாராவின் எல்லைகள், இந்திய-மலாய் தீவு, நியூசிலாந்து, கஜகஸ்தான், சைபீரியா, மடகாஸ்கர்  பகுதிகளிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வடமாநிலங்களிலும் வெட்டுக்கிளிகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. வெட்டுக்கிளிகள் தாங்கள் வாழும் பகுதிகள் வறட்சி மற்றும் வெப்பமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவதாகவும், பெரும்பாலும் அரை-பாலைவனங்கள் மற்றும் உலர்ந்த படிவங்களில் வசிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வெட்டுக்கிளிகளில் சில  வகைகள் விவசாயத்தை அடியோடு அழித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மந்தையைப் போல கூட்டம் கூட்டமாக வரும் இந்த வெட்டுக்கிளி அந்த பகுதியில் உள்ள அனைத்து வகையான தாவரங்கள், பயிர்களை அடியோடு அழித்து, உணவு பஞ்சத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

இவைகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காத நிலையில், வீடுகளின் மீது வேயப்படும் ஓலைக்கூரைகளைக் கூட விட்டுவைப்பதில்லை….  அந்த அளவுக்கு அகோர பசியுள்ள வெட்டுக்கிளிகள், இன்று இந்தியாவிலும் பரவி வருகிறது.

இப்போது இந்த வெட்டுக்கிளிகள் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் மட்டுமல்லாது, தமிழகத்திற்குள்ளும் புகுந்து தனது அட்டகாசத்தைத் தொடங்கி உள்ளது.

இதன் தாக்குதலை தடுக்க மத்திய மாநிலஅரசுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. விவசாய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, விசாயப் பயிர்களை அடியோடு அழித்துவருகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் அடியோடு அழிந்து வருகிறது.

இந்த இயற்கை பேரழிவைச் சமாளிப்பதற்கான தடுப்பு முறைகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். இதற்கான மருந்துகள் அடிக்கப்பட்டும், அதன் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

மேலே காணப்படும் வீடியோ,,, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலோர் மாவட்டத்தில் உள்ள விவசாய பகுதி களை ஆக்கிரமித்து உள்ளதை  காட்டுகிறது. அதை விரட்ட விவசாயிகள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தற்போது டிரோன்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

வெட்டுக்கிளிகளை அடியோடு ஒழிக்கும் வகையில், மருந்துகள் தெளிக்கப்பட்டும், டயர் போன்றவைகள் கொண்டு தீயிட்டும், அதிக சத்தங்களை எழுப்பியும்  விரட்டி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், வெட்டுக்கிளிகளோ, விவசாயிகளுக்கும் பெப்பே, அதிகாரிகளுக்கும் பெப்பே என்று கூறி, விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.

வெட்டுக்கிளியின் வரலாறு:

சாந்தமான. பூச்சியாக கருதப்படும் இந்த வெட்டுக்கிளி, ஒரு பூச்சி ஒவ்வொரு நாளும் தனது எடையளவு உணவு களை சாப்பிடும் சக்தி கொண்டது என்றும், உணவு தானியங்களை அழித்து மக்களுக்கு மரண தண்டனையை வழங்கி விடும் என்று கிறிஸ்தவ புனித நூலான விவிலியத்தில்கூட கூறப்பட்டுள்ளது.

1880ம் ஆண்டில் ரஷ்யாவின் தெற்குப் பிரதேசத்து மக்கள், வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு பயந்து பல நாட்கள் கதவைச் சாத்திக் கொண்டு வீட்டிற்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம்.

1955ம் ஆண்டில் மொராக்கோ நாட்டிற்குப் பறந்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் இருபது கிலோ மீட்டர் வரை பரவி, போர்க்கால அடிப்படையில் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த பயிர்களை அழித்தாகவும் கூறப்படுகிறது.

இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்க பறவைகள், எலிகள், ஓணான்கள், பச்சோந்திகள், பாம்புகள், கீரிகள் போன்ற ஜீவராசிகள் தேவை என்பதும் முக்கியம்.

இந்த வெட்டுக்கிளிகளின்  ஒருவகையான  லோகஸ்ட்டுகள்  எனப்படும் வெட்டுக்கிளிகள்தான் பெரும் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடிச் சென்று, ஒரு வயலையோ, ஒரு பகுதியையோ ஒரே நேரத்தில் காலி செய்துவிடு கின்றன… மேலும், இந்த வெட்டுக்கிளிக்கு, பஞ்சோந்தி போல, உடல் நிறத்தை மாற்றும் சக்தியும் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்…

ஒரு நாட்டில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்த இந்த லோகஸ்டு வகையான வெட்டுக்கிளிகளே போதும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த வகையான வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிலும் முகாமிட்டு உள்ளது. இது விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது…