‘லோக் ஆயுக்தா:’ தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது
சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா இன்று நிறைவேறியது. இந்தியாவில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ள 18வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழக சட்டமன்ற மானியகோரிக்கைத் தொடர் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.
இன்றைய கூட்டத்தில், முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
இந்த லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற உச்சநீதி மன்றம் விதித்துள்ள கெடு நாளை முடிவடையும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இன்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துக்கள் படி, முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டமான இன்று லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
பின்னர் மசோதா மீதான விவாதம் மதிய இடைவேளைக்கு பிறகு நடைபெற்றது.
மசோதா குறித்த விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய என சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, மசோதாவை வரவேற்றும் திமுகவின் கோரிக்கைக்கு ஆதரவாகவும் பேசினார்.
விவாதத்தற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த மசோதாவில் ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள் என்றும், யார் எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றும், இந்த மசோதாபடி, லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.
ஆனால், அமைச்சர் ஜெயக்குமான் பதிலை ஏற்காத திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, மசோதா குறித்து, சபாநாயகர் தனபால் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் அதிக வாக்குகள் பெற்றதை தொடர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
லோக் ஆயுக்தா சட்டம் இதுவரை இந்தியாவில் 17 மாநிலங்களில் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், 18வது மாநிலமாக தமிழகம் இன்று நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.