நாடாளுமன்ற தேர்தல்2019: பலத்த பாதுகாப்புடன் முதல்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் தொடங்கியது

--

டில்லி:

17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 91 தொகுதிகளில் தொடங்கி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே தேர்தல் ஆணையம்  அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல் கட்டமாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனுடன் சேர்த்து, ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. பொதுமக்கள் அமைதியான முறையில் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில், வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர், சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் கட்டத் தேர்தலில், சுமார் 14,21,61,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் களத்தில் 1,279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், மூன்றாம் பாலினத்தவர், 7,764 பேர் தங்கள் வாக்குகளை செலுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் முன்னதாகவே பல இடங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வாக்குச்சாவடிக்கு வரத் தொடங்கி விட்டனர்.

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோகன் பகவத், தனது வாக்கை செலுத்தை அதிகாலையிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்தார்.

அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.