நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை மார்ச் முதல் வாரம் அறிவிப்பு : ANI தகவல்

டில்லி

நாடாளுமன்ற தேர்தல் 2019 அட்டவணை வரும் மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கபடும் என ஏ என் ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்துடன் மக்களவை ஆயுட்காலம் முடிவடைகிறது. மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் பணிகளில் ஏற்கனவெ அனத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே தேர்தல் அட்டவணை குறித்து சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின.

ஆனால் தேர்தல் ஆணையம் அந்த அட்டவணை பொய்யானது என அறிவித்துள்ளது. மேலும் அந்த அட்டவணையுடன் தொடர்புடைய மற்றும் பரப்பியவர்களை பிடிக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து டில்லி காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் செய்தி ஊடகமான ஏ என் ஐ (ANI) தனது டிவிட்டரில், “இந்திய தேர்தல் ஆணையம் 2019 மக்களவை தேர்தலின் அட்டவணையை வரும் மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்க உள்ளது. இந்த தேர்தல் 6 முதல் 7 கட்டங்களாக நடைபெறும்” என பதிந்துள்ளது.