நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில் தங்கள் பெயர், முகவரி மற்றும் இதர தகவல்களை வீட்டில் இருந்தபடி இணையத்தில் திருத்தம் செய்துக் கொள்ள புதிய நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

poll

அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில், அரசியலமைப்பு சட்டத்தின் படி ஜனவரி மாதம் 1ம் தேதி வரை 18 வயதினை பூர்த்தி செய்த அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அதன்படி வாக்களிக்கும் மக்கள் பொது வாக்காளர்கள், வெளிநாட்டு வாக்காளர்கள்(வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள்) மற்றும் சேவை வாக்காளர்( ராணுவ வீரர்கள்) என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நிறைவடைவதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒருபுறம் பிரதான கட்சிகள் கூட்டணி அமைப்பதில் முழு ஈடுப்பாட்டில் இறங்கியுள்ளன. மற்றொருபுறம், வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், போலி வாக்காளர்களை கண்டறிந்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைன் பதிவு ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதன்படி உரிய இணையத்தள பக்கத்திற்கு சென்று வாக்களர்கள் தனது வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி, தேவையான மற்றும் தேவையற்ற தகவலகளை திருத்தம் செய்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவில் வாக்காளர் விவரங்களை திருத்தம் செய்வதற்கு படிவம் 8 -யும், முகவரி மற்றும் பொது விவரங்களை சேர்க்க படிவம் 8A -யும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி?

1. முதலில் https://nvsp.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதில் தோன்றும் முகப்பு பக்கத்தில் ‘Form 8’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. அதன்பின்னர் தோன்றும் பக்கத்தில் மேல்பகுதியின் வலதுபுறத்தில் மொழியை தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று தங்களுக்கான விருப்ப மொழியை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

4. அதையடுத்து மாநிலம், பாராளுமன்ற/சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

5. அதன்பின்னர் தோன்றும் பகுதியில் பெயர், வாக்காளர் பகுதி எண் மற்றும் வாக்காளர் வரிசை எண்ணை நிரப்ப வேண்டும்.

6. அதன்பின்னர் நீங்கள் திருத்தம் செய்ய விரும்பும்( பெயர், புகைப்படம், முகவரி) உள்ளிட்டவற்றை டிக் செய்ய வேண்டும்.

7. அதன்பிறகு, சரியான தகவல்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்.

8. தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். ( உதாரணமாக வயது திருத்தம் செய்தால் பள்ளி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும். வீட்டு முகவரியை திருத்தம் செய்தால் மின்கட்டண ரசீது அல்லது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றவும்).

9. இறுதியாக ‘Submit Button’-ஐ கிளிக் செய்யவும்.

இவை அனைத்தும் முடித்த நிலையில் திரையில் தோன்றும் எண்ணை(reference number) குறித்துக் கொள்ள வேண்டும். அந்த எண் தான் உங்களின் திருத்தங்களை சரிபார்க்க உதவும்.

இதையடுத்து, நீங்கள் திருத்தம் செய்தவற்றை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி (https://www.nvsp.in/Forms/Forms/trackstatus)க்கு சென்று சரிபார்த்துக் கொள்ளவும். அல்லது 1950 என்ற உதவி எண்ணை அழைத்து உங்கள் திருத்தங்களை அறிந்துக் கொள்ளலாம். இதற்கு reference number தேவைப்படும்.