இந்திய நாடாளுமன்ற தேர்தல் 2018 ல் நடைபெறும் : சீன ஊடகம்
பீஜிங்
இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல்கள் 2019க்கு பதிலாக 2018 இறுதியில் நடைபெறும் என சீன அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் 2019ல் முடிவடைய உள்ளது. அதை ஒட்டி பொதுத் தேர்தலுக்காக இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதைக் குறித்து பல சர்வ தேச ஊடகங்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. சீன அரசின் ஊடகமான ஜிங்குவா ஒரு கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவில் ஆளும் பாஜக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக பெரிய மாநிலங்களான உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதன் புகழ் மங்கி வருகிறது. அதனால் பொதுத் தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்த வாய்ப்புள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு சவாலாக இரு சாதிக் கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை உள்ளன. அதே போல மகாராஷ்டிராவில் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் உறவில் விரிசல் உண்டாகி இருக்கிறது. இதன் தாக்கமும் பாஜகவை பாதிக்க வாய்ப்புள்ளது.
நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பின் படி மீண்டும் நரேந்திர மோடி அரசு பதவிக்கு வருவதை 47% மக்கள் விரும்பவில்லை என தெரிகிறது. மேலே குறிப்பிட்ட பெரிய மாநிலங்களில் கடந்த 2014 பொதுத் தேர்தலில் 170 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பாஜக கடுமையாக தோல்வியுறும் எனவும் இதன் தாக்கத்தால் ஆட்சி மாற்றம் நிகழும் எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் பாஜகவின் நிலை மேலும் சீர் கெடுவதற்குள் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கு பிறகு அரசு இந்த தேர்தலை முன்கூட்டியே நடத்தும் முடிவை அறிவிக்கும்” என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.