டில்லி

மார்ச் மாதம் 5 ஆம் தேதிக்குள் மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு மே மாதத்துடன் தற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது.  எனவே இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான திட்டங்களை தொடங்கி நடத்தி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளது.

இந்த தேர்தல் தேதிகள் குறித்த அட்டவணை, மற்றும் முக்கிய விதிகள் ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளது. தற்போது இந்த தேர்தல் அட்டவணை மற்றும் முக்கிய விதிகள் குறித்த பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது.

வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் தேர்தல் குறித்த அட்டவணை மற்றும் அறிவிப்புக்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி 9 கட்டங்களாக நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. அத்துடன் மே மாதம் 2 ஆம் வாரம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.