பாட்னா

ரு ஜோதிடர் கூற்றுப்படி 2018 இடையில்  மக்களவை தேர்தல் நடக்கும் என லாலு பிரசாத் யாதவ் கூறி உள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தற்போது தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்கிறார்.  ஆனால் அரசியிலில் இருந்து விலகி இருக்கவில்லை.   அடிக்கடி தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.  நேற்று பாட்னாவில் நடந்த அவருடைய கட்சி பொறுப்பாளர்களின் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது அவருடன் ஜோதிடரும் முன்னாள் விற்பனை வரி அதிகாரியுமான சங்கர் சரண் திரிபாதியும் உடனிருந்தார்.

லாலு தனது உரையில், “ஒரு ஜோதிடர் குறிப்பிட்டபடி மோடியின் அரசு 2019 வரை இருக்காது.  ஏனெனில் அவர் பதவியை ஏற்றுக் கொண்டது ஒரு அபசகுனமான நேரத்தில்.   அந்த பதவி ஏற்பு நடந்த நேரத்தை இரவென்றும் சொல்ல முடியாது, பகல் என்றும் சொல்ல முடியாது.   அது போல ஒரு வேளையில் தான் அரக்கன் இரணியன் நரசிம்ம பகவானால் கொல்லப்பட்டான்.

இது போல ஒரு கெட்ட நேரத்தில் பதவி ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தான் மோடியின் ஆட்சியில் பல தீமைகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.   வரும் 2018 இடையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் மோடி 2018 ஆனாலும் சரி, 2019 ஆனாலும் சரி தேர்தலில் வெற்றி பெற மாட்டார்.  எப்போது மக்களவை தேர்தல் நடக்கிறதோ அப்போது சட்டசபை தேர்தலையும் உடன் நடத்த தயாரா என நான் நிதிஷ்குமாரைக் கேட்கிறேன்.

என்னை அச்சுறுத்த பல வழக்குகள், சோதனை என பலவற்றையும் இந்த அரசு செய்து வருகிறது.   நான் பயப்படமாட்டேன்.  என்னை சிறையில் தள்ளினால் தான் அவர்கள் தேர்தலில் வெல்ல முடியும் என அவர்கள் நினைக்கின்றனர்.   ஆனால் என்னை சிறையில் தள்ளினாலும் சரி, மலையின் பின்னால் மறைத்து வைத்தாலும் சரி எனது கருத்துக்கள் அவர்களை தேர்தலில் வெல்ல விடாது.  இந்த மோடி அரசு என்னை மட்டும் அல்ல, மாயாவதி, மம்தா பானர்ஜி, முலயம் சிங் யாதவ் அகிலேஷ் யாதவ் போன்ற பலரையும் பழிவாங்கி வருகிறது.  கிட்டத்தட்ட இப்போது இன்னொரு எமர்ஜன்சி நடைபெற்று வருகிறது.

குஜராத் தேர்தலைப் பொறுத்தவரை நரேந்திர மோடி தோற்கடிக்கப்போவது உறுதி.  நான் ஹர்திக் படேலுடன் பேசி இருக்கிறேன்.  அவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பாரதியுடன் நல்ல நட்புடன் இருக்கிறார்.   அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது.  அது கண்டிக்கத்தக்கது.  நிதிஷ்குமார் தனது கட்சியினரை குஜராத் தேர்தலில் போட்டியிட வைத்தது படேல் சமுதாயத்தினரின் ஓட்டுக்களை பிரிக்க செய்த சதி ஆகும்.  நிதிஷ்குமாருக்கு போட்டியிட வேண்டும் எனில் பா ஜ க என்னும் பெயரில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.