17 மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: அமித்ஷா நடவடிக்கை

டில்லி:

2019ம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, மாநிலங்களுக்கு புதிய தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நியமனம் செய்துள்ளார். முதல் கட்டமாக 17 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்து உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக மக்களவை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாரதியஜனதா கட்சி இப்போதே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் மோடி இப்போதே தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ஒத்தி வைத்து விட்டு தேர்தல் பிரசாரப்பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த நிலையில், 17 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாஜ  வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் முதல் கட்டமாக 17 மாநிலங்களுக்கான கட்சி பொறுப்பாளர்களும், இணை பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் குஜராத்தை சேர்ந்த கோவர்தன் ஜதாபியா, கட்சியின் துணை தலைவர் துஷ்யந்த் கவுதம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராஜஸ்தானுக்கும், உத்தரகாண்டுக்கு மற்றொரு அமைச்சர் தவார்சந்த் கெலாட்டும், பீகாருக்கு பாஜ பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவும், சட்டீஸ்கருக்கு அனில் ஜெயினும், மாநிலங்களவை உறுப்பினர் முரளிதரன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தியோதர் ராவ் ஆகியோர் ஆந்திர மாநிலத்திற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அசாமுக்கு மகேந்திர சிங்கும், ஓ.பி. மாத்தூர் குஜராத் மாநிலத்திற்கும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர இமாச்சல பிரதேசம் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, பஞ்சாப், தெலங்கானா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி