டில்லி:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பி. க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் இவர்கள் ராஜினாமா கடிதத்தின் மீது மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில் 5 எம்.பி.க்களும் தங்களது ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் ஒரு உறுப்பினர் ராஜினாமா செய்யவில்லை என்பதை மட்டுமே சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும். மற்றபடி முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுரை வழங்கும் நடைமுறை சபாநாயகருக்கு இல்லை. இந்த எம்.பி.க்களின் ராஜினமாவை ஜூன் 3ம் தேதிக்குள் ஏற்றாக வேண்டும்.

இல்லை என்றால் அதன் பின்னர் ஒரு வருடத்திற்கும் குறைவான பதவி காலம் மட்டுமே இருக்கும். பதவி காலம் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும். அல்லது முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய தேர்தலாக இருந்தால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும். ஆந்திரா சட்டமன்ற தேர்தல் 2019 லோக்சபா தேர்தலோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில நலனுக்காக ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலில் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ராஜினாமா செய்த எம்பி மிதுன் ரெட்டி கூறுகையில், ‘‘ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் ஏன் இவ்வளவு காலம் தாழ்த்துகிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. 5 தொகுதிகுகளிலும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எங்களது கட்சி பிரபலமடையும். அதோடு மக்கள், தெலுங்கு தேசம் கட்சியையும் புறக்கணிப்பார்கள்.

இடைத்தேர்தலை தவிர்க்க பாஜக மற்றும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமாவை உடனடியாக ஏற்க வலியுறுத்துவோம். ஜூன் 3ம் தேதிக்கு முன்பு ராஜினாமாவை ஏற்றால் தான் இடைத்தேர்தல் சாத்தியமாகும்’’ என்றார்.