டில்லி:

லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனை காரணமாக  நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 107.24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு 2 வாரமே ஆன நிலையில், தேர்தல் விதிகளை மீறி பணம் எடுத்து செல்பவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் மொத்தம் 539 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம், நகைகள், மது பானங்கள்  பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 107.24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து உள்ளது.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து உ.பி. மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 104.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஆந்திராவில் 103.4 கோடி ரூபாயும், பஞ்சாபில் 92.8 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. ஜார்கண்ட், மிசோரம் மாநிலங்களில் ரூ.1 கோடி அளவில் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக நாடு முழுவதும் ரூ.539 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டு இருப்பதாகவும், இதில் ரொக்க பணம் 143.47 கோடி ரூபாய் என்றும், 89.64 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 131,75 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்கள், ரூ.162.93 கோடி மதிப்பிலான நகைகள்,  ரூ.12.20 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

மிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த 11-ஆம் தேதி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் ரூ.1.33 கோடியும், காஞ்சிபுரத்தில் ரூ.3.15 கோடியும், திருவள்ளூரில் ரூ.1.04 கோடியும், தஞ்சாவூரில் ரூ.1.78 கோடியும், மதுரையில் ரூ.1.44 கோடியும் பறிமுதல் ஆகியுள்ளன.

மதுரையில் ரூ.4.59 கோடியும், சேலத்தில் ரூ.2.16 கோடியும், நீலகிரியில் ரூ.1.21 கோடியும், சென்னையில் ரூ.1.25 கோடியும் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ஒரு இடத்தில் நிலையாக நின்று சோதனையில் ஈடுபடும் நிலை கண்காணிப்பு குழுக்களும் அதிகளவு ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.