லோக்ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக் ஆயுக்தா அமைப்பின்  தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம் என  தமிழக அரசு அறிவித்து உள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் உள்பட  மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால்  அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலும் லோக் ஆயுக்தா தொடர்பான மசோதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, லோக்ஆயுக்தா  அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் லோக்ஆயுக்தா தலைவர் தேடுதல் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி தேடுதல் கமிட்டி அமைத்தனர்.

இந்த நிலையில்,  தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா தலைவர் பதவிக்கு  உயர்நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.