சென்னை:

ச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்ஆயுக்தா வழக்கில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், தமிழகத்தில் உடனே லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து வரும் ஜூலை 10ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் சம்பந்தமாக வழக்கு தொடர வகை செய்யும் வகையில் ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக் பால்’ சட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் மூலம் ஊழல் நிரூபிக்கப்பட்டால் அந்த ஊழலில் ஈடுபட்டவர்களின் பதவி பறிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும் ஊழல் செய்தவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடுக்க முடியும். அந்த வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 15 மாநிலங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இப்படி லோக் ஆயுக்தா அமைக்காத மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்றும், அதற்குண்டான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

எனவே தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும். அதன் மூலம் இனி தமிழகத்தில் ஊழலுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்பது தான் த.மா.கா.வின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.