லோக்பால் தேர்வுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது: முடிவு எடுக்கப்படுமா?

டில்லி:

ழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் அமைப்பை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள தேர்வு கமிட்டி கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இன்றைய கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் குறித்து முடிவு எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே மார்ச் 1ந்தேதி லோக்பால் தேர்வு கமிட்டி கூடியது. இதில்  எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடுவதாகவும், இன்றைய கூட்டத்தில்  லோக்பால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பற்றி விவாதம் நடத்தி முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

ழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு 2014 ஜனவரியில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். ஓராண்டுக்குள் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை லோக்பால் அமைக்கப்படவில்லை. இந்த அமைப்பில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்ய கமிட்டி அமைக்க வேண்டும். அதில் பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெற வேண்டும்.

மக்களவையின் 545 உறுப்பினர்களில் 10 சதவீத எண்ணிக்கை கொண்ட கட்சிதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற முடியும் எனபது விதி. ஆனால்,  கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்கவில்லை. இந்த காரணத்தால் லோக்பால் தேர்வு கமிட்டி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு லோக்பால் அமைப்பை உடனே  அமைக்க உத்தரவிடக்கோரி கடந்த ஆண்டு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம்  நடைபெற்ற விசாரணையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத காரணத்தால் லோக்பால் தேர்வு கமிட்டி அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால்,  “எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்ற காரணத்தால் லோக்பால் அமைப்பதை தாமதம் செய்யக்கூடாது” என்று நீதிபதிகள் கண்டித்தனர். அதைத்தொடர்ந்து பல முறை விசாரணை நடைபெற்றும் இதுவரை லோக்பால் தேர்வுகுழு கூடி முடிவு எடுக்காத நிலையே நீடித்து வருகிறது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணை  உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு முன்பு மீண்டும் வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, லோக்பால் அமைப்பை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள தேர்வு கமிட்டி கூட்டம் இன்று நடைபெற உள்ளது என்றும், இந்த கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றும்   உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.