சென்னை:

திமுக பாஜக கூட்டணியில், ஜி.கே.வாசனின் தமிழ்மாநிலகாங்கிரசும், விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இன்று மாலை நடைபெற உள்ள மோடி தலைமையிலான வண்ணடலூர் கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில், வைக்கப்பட்டுள்ள பேனரில் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன் விஜயகாந்த் மற்றும் வாசன் படமும்  இடம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. இந்த இரு அணிகளும் விஜய காந்தின் தேமுதிகவை இழுக்க பேரம் பேசி வந்த நிலையில், பிரேமலதாவின் கடும் கெடுபிடி காரணமாக, திமுக, தேமுதிகவை விடுத்து தனது கூட்டணியை அமைத்து உள்ளது.

இந்த நிலையில், அதிமுக, பாஜக தலைவர்கள் தேமுதிக தலைவர்களிடம் பல முறை பேசி வந்த நிலையில், கூட்டணி குறித்து நேற்று இரவு வரை தேமுதிக தரப்பில் இருந்து  பதில் வராததால், இன்று மோடி தலைமையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தேமுதிக பேனர்கள், கொடிகள் நேற்று நள்ளிரவு அகற்றப்பபட்டன. அதுபோல ஜி.கே.வாசன் பெயரும் கூட்டணி தொடர்பான விளம்பரங்களில் இடம்பெறவில்லை.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தேமுதிக இன்னும் கூட்டணி குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையில், இன்று மாலை நடைபெறும் மோடி தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில், மதிய வேளையில், திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும், தமாக தலைவர் ஜி.கே. வாசன் படங்கள் ஒட்டப்பட்டன.

இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக, த.மா.க இணைவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மோடி கூட்டத்துக்கு விஜயகாந்த் வருவாரா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.