டில்லி:

பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக, பாராளுமன்ற லோக்சபா  எம்.பி.க்கள் கருத்துத் தெரிவிக்க பாராளுமன்ற செயலர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தற்போதைய இந்திய பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 1921ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், தனது  100வது வயதை எட்டி வருகிறது. இதன் காரணமாக, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மோடி தலைமையிலான மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு டில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  இரண்டடுக்கு வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  “வரும் 2022 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைய உள்ளது.  அதையொட்டி வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது” என்று கூறியிருந்தார்.

அதையடுத்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், புதிய பாராளுமன்றம் கட்டுவது தொடர்பாக பிரபல கட்டிடக்கலை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில், தற்போது, பாராளுமன்ற சபாநாயகரின் இணை செயலாளர், திருமதி அபாசிங் யதுவன்ஷி, லோக்சபா உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை கோரி உள்ளார்.

பாராளுமன்ற லோக்சபா எம்.பி.க்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள் கடிதத்தில், தற்போதைய பாராளுமன்றத்தை சீரமைப்பு மற்றும் புதிய பாராளுமன்றம் கட்டுவது தொடர்பாக உறுப்பினர்கள் தங்களது மேலான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று கூறி உள்ளார்.

தங்களது கருத்துக்களை ‘msbranch-lss@sansad.nic.in’ என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.