டோக்கியோவில் கொரோனா: ஒலிம்பிக் போட்டியை லண்டனுக்கு மாற்ற திட்டமா?

லண்டன்:

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பான்  தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. ஆனால், அங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியை லண்டனுக்கு மாற்றினால், அதை நடத்த தயாராக இருப்பதாக லண்டன் மாநகர மேயர் பதவிக்கான   கன்சர்வேடிவ் வேட்பாளர் ஷான் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த ஒலிம்பிக் போட்டி  இந்த ஆண்டு (2020) ஜப்பான் நாட்டின்  டோக்கியோ நகரில் ஜூலை 24ந்தேதி முதல் ஆகஸ்டு 9ந்தேதி வரை  நடைபெற உள்ளது/

இந்த நிலையில் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை 2118 பேர் பலியான நிலையில், 74,576 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்குள்ள நேஷனல் ஹெல்த் கமிஷன் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் ஜப்பான், இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில், ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உலக சுகாதார அமைப்பால் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த அறிவுறுத்தி உள்ளதாகவும், ஜப்பான் என்ன முடிவு செய்யப்போகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று ஆசியாவின் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஒலிம்பிக் குறித்த கேள்விகளுக்கு  எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து டோக்கியோ அமைப் பாளர்கள் பொது சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி உள்ளனர். டோக்கியோ அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அவர்களில் 2 பேர் இன்று மரணத்தை தழுவி உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக் போட்டி தொடர்பாக, டோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழு பெய்லியின் கருத்துக்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கொரோனா வைரஸ் மீது தேவையான நடவடிக்கைகளை  அரசு  எடுத்து வருவதாக  மின்னஞ்சல் அறிக்கையில் கூறியுள்ளது. அதில், “டோக்கியோ 2020 தொற்று நோய்கள் ஏதேனும் இருப்பதை கவனமாக கண்காணிக்கும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் தொடர்ந்து ஒத்துழைக்கும், மேலும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் அவசியமான எந்தவொரு எதிர்விளைவுகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.

இந்த நிலையில்தான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை லண்டனுக்கு மாற்றினால், அதை நடத்த தயாராக இருப்பதாக லண்டன் மாநகர மேயர் பதவிக்கான கன்சர்வேடிவ் வேட்பாளர் ஷான் பெய்லி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டியை ஜப்பானில் இருந்து லண்டனுக்கு மாற்ற திட்டமிடப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது…

இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் அருகே கொரோனா தொற்றால் நடுக்கலில் உள்ள நிறுத்தப்பட்டு உள்ள டயமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் இங்கிலாந்து நாட்டினருக்கு சொந்தமானது. இதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.