ரூ.9,000 கோடி மோசடி: விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் நாளை பரபரப்பு தீர்ப்பு

வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன்பெற்று வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவரும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

vijay

வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டன. 9 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. மறுபுறாம் அமலாக்க பிரிவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, செக் மோசடி வழக்குகள் விஜய் மல்லையா மீது பாய்ந்துள்ளது.

இதற்கிடையில், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்திய அரசு விஜய் மல்லையாவை ஒப்படைக்கும் படி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தது. இதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக 150 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. அதன் காரணமாக இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் விரைந்துள்ளனர். நாளை இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு வெளியாகும் தருவாயில் தான் பெற்ற வங்கி கடன் அனைத்தையும் 100 சதவிகிதம் செலுத்தி விட தயாராக இருப்பதாக விஜய் மல்லையா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.