ண்டன்

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரிய வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப் பட்டது.  அதற்கு விஜய் மல்லையா நேரில் ஆஜரானார்.  அப்போது விசாரணை எட்டு நாட்கள் கழித்து டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.

இதற்கிடையே விஜய் மல்லையா சார்பில் லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் லாரன்ஸ் சேஸ் ஒரு மனுவை நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.  தெற்கு ஆசியாவின் அரசு மற்றும் அரசியல் மேதையான லாரன்ஸை விஜய் மல்லையாவின் வழக்கில் மல்லையாவின் வழக்கறிஞர் பணியில் அமர்த்தியுள்ளார்.

லாரன்ஸ் சேஸ்

லாரன்ஸ் தனது மனுவில், “இந்தியாவில் உள்ள புலனாய்வு நிறுவனங்களான ஈடி மற்றும் சிபிஐ ஆகியவைகள் சுதந்திரமாக இயங்குவதில்லை.  மேலும் இவைகளின் ஆய்வுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதும் இல்லை.   விஜய் மல்லையாவின் வழக்கை விசாரித்து வரும் ராகேஷ் ஆஸ்தானா சிபிஐயின் விசேஷ இயக்குனர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கப் பட்டார். அப்போது இந்தியாவின் லஞ்ச ஒழிப்புத் துறை அவர் பெயரில் லஞ்சக் குற்றங்கள் இருப்பதை சுட்டிக் காட்டி உள்ளது.  இதை மத்திய புலனாய்வு கமிஷனும் அமோதித்தது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு அறிக்கையில் “நான் அந்தப் பகுதி அரசியல் மற்றும் அரசுத் துறைகளைப் பற்றி நன்கு அறிந்தவன்.  நான் இந்தியாவின் அரசியல் அமைப்பு,  அந்த நாட்டின் அரசியல், வங்கிச் சீர்திருத்தம் ஆகிய அனைத்து துறைகளைப் பற்றியும் பல உரைகள் நிகழ்த்தி உள்ளேன்.  இந்தியாவில் உள்ள டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் சொற்பொழிவு ஆற்றி உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.

லாரன்ஸ் தனது மனுவில் மத்திய புலனாய்வுக் கமிஷனைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் ஆஸ்தானாவின் பதவி உயர்வை எதிர்த்தது சிபிஐயின் மற்றொரு இயக்குனரன அலோக் வர்மா தான்.  மத்திய புலனாய்வுக் கமிஷன் ஆஸ்தானா மேல் உள்ள குற்றங்களை மறுத்துள்ளது.

இது குறித்து பல பத்திரிகையாளர்கள் லாரன்ஸ் சேஸிடம் விளக்கம் கேட்டபோது அவர் விளக்கம் அளிக்க மறுத்து விட்டார்.  அவர் தனது மனுவை நீதிமன்றத்தில் அளித்து விட்டதாகவும்,  விஜய் மல்லையாவின் வழக்கறிஞரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.