பலாத்கார சாமியார் தப்பிச் செல்ல திட்டமா? : வளர்ப்பு மகள் தலைமறைவு

--

சிர்சா

சாமியார் ராம்ரஹீம் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட உடன் அவரை தப்பிக்க வைக்க வளர்ப்பு மகள் ஹனி பிரீத் முயன்றதால் அவரை போலீஸ் தேடி வருகிறது.

அரியானா மாநில அரசு சமீபத்தில் பலாத்கார சாமியாரின் வளர்ப்பு மகள் என சொல்லப்படும் ஹனி பிரீத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து தேடி வருகிறார்கள்.

ஆதித்யா இன்சான்

இது குறித்து அரியானாவின் போலீஸ் டெபுடி கமிஷனர் மன்பீர் சிங் தெரிவித்ததாவது :

”சாமியாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த உடன் அவரை தப்பித்து அழைத்துச் செல்ல ஒரு சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது.  இந்த திட்டம் தீட்டியவர்கள் இருவர்.  அவருடைய வளர்ப்பு மகள் என சொல்லப்படும் ஹனி பிரீத் மற்றும் தேரா சச்சாவின் முக்கிய பிரமுகரான ஆதித்யா இன்சான் ஆகிய இருவருமே ஆகும்.  இது தவிர ஆதித்யாவின் தூண்டுதலால் தான் அரியானாவில் கலவரம் ஏற்பட்டு 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  லட்சக்கணக்கான பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.  இந்த கலவரத்தை தூண்டியதிலும் ஹனி பிரீத்துக்கு பங்கு இருப்பதாக நம்பப் படுகிறது.

அதனால் நாங்கள் அவருக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுத்து தேடி வருகிறோம். (லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் வெளிநாடு செல்ல முடியாது).  தவிர சாமியாரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் போது அனுமதி இல்லாமல் ஹனி பிரீத் அவருடன் பயணம் செய்துள்ளார்.  அதுவும் அவரை தப்பிக்க வைக்க நடத்திய முயற்சி எனவே கருதுகிறோம்.  ஹனி மற்றும் ஆதித்யா ஆகிய இருவருமே தலைமறைவாக உள்ளனர். தீவிரமாக தேடி வருகிறோம்” என கூறி உள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்தே ஹனி மீடியாக்களில் பரபரப்பாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்.  அவருடைய கணவர் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஹனிக்கும், சாமியாருக்கும் பாலியல் தொடர்பு உள்ளதாக வழக்கு பதிந்திருந்தார்.  பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை ஒட்டி வழக்கை ஹனியின் கணவர் திரும்பிப் பெற்றார்.