டில்லி

டில்லியில் சுமார் ரூ. 30000 மதிப்புள்ள மாம்பழங்களைப் பறி கொடுத்த வியாபாரிக்குப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

டில்லியில் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்து வந்த ஃபூல்மியா எனப்படும் சோட்டே என்பவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வண்டியில் பழங்களை விற்றுச் சென்றுள்ளார்.  அப்போது அங்கு இரு கும்பலுக்கிடையே தகராறு நடந்ததால் அங்கிருந்த வியாபாரிகள் அவசரம் அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளனர்.  அவ்வாறு செல்கையில் சோட்டேவின் வண்டியில் இருந்த மாம்பழங்கள் கீழே விழுந்துள்ளன.

அதைக் கண்ட சிலர் அதை எடுத்துக் கொடுக்காமல் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிச் சென்றுள்ளனர்.    இச்சம்பவம் வீடியோ பதிவாகி சமூக வ்லைதளங்களில் வைரலானது.   சுமார் ரூ.30000 மதிப்புள்ள மாம்பழங்களை இழந்த அந்த வியாபாரிக்கு உதவுமாறு பல ஊடகங்கள் வேண்டுகோள் விடுத்தன. அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தன

பொதுமக்களில் பலர் ரூ.10, 200 என நிதி உதவி அளித்துள்ளனர்.  சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கிணங்க சோட்டே இழந்த மாம்பழங்களின் தொகை அவருக்கு மக்கள் நிதி உதவி மூலம் கிடைத்துள்ளது.  சோட்டே  இந்த உதவியால் தமது வாழ்வாதாரம் மீண்டும் கிடைத்துள்ளதாகவும் தாம் ரம்ஜான் பண்டிகையை தமது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிந்ததாகவும் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்துள்ளார்.