முருகன் கோவில்களின் இன்று திருக்கல்யாணம் கோலாகலம்!

ந்த சஷ்டி விழாவின் நிறைவுநாளான  இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.

இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.  மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.

நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, குமரவிடங்கபெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடக்கிறது.

மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

அதுபோல  இத்தலத்திலும்  முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.

அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் வித மாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

கஷ்டி விழாவையட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. இந்த பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் மேற்கொண்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.