சென்னை: 

திருப்பதி உண்டியலில் ரூ.8 கோடி பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகள் இருந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் ஆகிய உயர்மதிப்பு நோட்டுகளை புழக்கத்திலிருந்து தடைவிதித்தார்.

இதையடுத்து தடைவிதிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய கடந்த டிசம்பர் இறுதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் தடைசெய்யப்பட்ட நோட்டுகளை இன்னும் மாற்றாதவர்கள் ஏராளமாக உள்ளனர். கடந்த ஜனவரி முதல்தேதியிலிருந்து மார்ச் முதல்தேதிவரை திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட பணத்தில் 8 கோடி ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி சாம்பசிவராவ், டிசம்பர் 30க்கு பிறகு உண்டியலில் செலுத்தப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தெரிவித்தார். இப்பிரச்னை தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார். திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்ட 8 கோடி ரூபாய் கணக்கில்காட்டப்படாத கருப்புப்பணம் என்று கூறப்படுகிறது.