சென்னை: லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு நடைமுறையால், தமிழகத்தில் மொத்தமுள்ள 4.50 லட்சம் லாரிகளில், 4 லட்சம் லாரிகள் லோடு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள், விவசாய விளை பொருட்கள் பரிமாற்றத்தில் 20% அளவிற்கான லாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்த லாரிகளும் மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை என்ற பெயரில் பல மணிநேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், முழுமையாக லோடு கிடைப்பதில்லை.
சமீபத்தில், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் எரிபொருள் செலவில் 30% கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழுமையாக லோடு கிடைக்காத காரணத்தால், 10 டன் கொள்ளளவு உள்ள லாரியில், 6 டன் பொருட்கள் மட்டுமே ஏற்றப்படும் நிலையில், 10 டன் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தமிழக பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது, “தற்போதைய சூழலில் லாரி வாடகையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள், டீசல் மீதான வரிகளை குறைப்பதோடு, சுங்கக் கட்டணத்தை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்.
லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை, வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்தால், பழையக் கட்டணத்தில் லாரிகளை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம்” என்றார்.