ஜூலை-20ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் லாரி ‘ஸ்டிரைக்’ அறிவிப்பு

சேலம்:

ஜூலை-20ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

சேலம் அருகே உள்ள  கொண்டலாம்பட்டியில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கக் கட்டடத்தில்  லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தென் மண்டல லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்து உள்ளார்.

டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீடு கட்டணம் உயர்வு,  டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி , கடந்த 18ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்த கடந்த 21ந்தேதி முதல் வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து  மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலை யில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத் மாதம் ( ஜூலை)  20-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும்,  இந்தியா முழுவதும் உள்ள  68 லட்சம் லாரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், கேஸ் டேங்கர் லாரிகள்,  பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் வாகனங்க ளும் பங்கேற்க உள்ளன. என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மிக தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்தின்றி துறைமுகங்களும் பாதிகப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.