லாஸ் ஏஞ்சல்ஸ்

லிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டறியப்படாமல் ஏராளமான கொரோனா நோயாளிகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

உலக அளவில் கோரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நேற்று வரை இங்கு 8.18 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இதையொட்டி அமெரிக்காவில் முழு வீச்சில் கொரோனா சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  இவ்வாறு சோதனை நடக்கும் இடங்களில் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரும் ஒன்றாகும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டி பாடி எனப்படும் சோதனை நடைபெறுகிறது.  இந்த சோதனை அறிகுறி உள்ளவர் மற்றும் இல்லாதவர் ஆகிய அனைவருக்கும் நடத்தப்படும் சோதனையாகும்.  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 863 பேருக்கு நடந்த சோதனையில் 2.8% முதல் 5.6% வரை உள்ள மக்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

இதை மக்கள் தொகையுடன் வைத்துக் கணக்கிடும் போது 2.21 லட்சம் முதல் 4.42 லட்சம் பேர் வரை கண்டறியப்படாமல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  தற்போது 7994 பேருக்குப் பாதிப்பு உள்ளனர்  இந்த 7994 பேரும் அறிகுறிகள் உள்ளதால் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பு உள்ளதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.