மன நிலை சரியில்லாத  பிரதமர் மோடிக்கு சிகிச்சை தேவை: சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பகெல் ஆவேசம்

--

ராஞ்சி:

ராஜீவ் காந்தியை விமர்சித்து வரும் பிரதமர் மோடிக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை தேவை என சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பகெல் கூறியுள்ளார்.


மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பர் 1 ஊழல்வாதி என்று கூறிய பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பகெல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இந்த நாட்டுக்காக ராஜீவ் காந்தியின் அர்ப்பணிப்பு பெரிது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பணி மகத்தானது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அவர் உயிர் தியாகம் செய்துள்ளார்.

இதனால் அவருக்கு நாட்டின் உயரிய பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 3-4 மணி நேரம் மட்டுமே உறங்குவதாக பிரதம் மோடி கூறுகிறார். குறைவான தூக்கம் மூளையை பாதிக்கும். மன நிலை பாதிக்கப்பட்டவர் நாட்டின் உயர் பதவியில் இருந்தால், நாட்டுக்கு ஆபத்து.

நாட்டை நேசிப்பதாக மோடி பொய் சொல்கிறார். எதை செய்தாவது அதிகாரப் பசியை போக்க வேண்டும் என்பதே அவர் லட்சியம்.

ராஜீவ் காந்தி பற்றி தெரிவித்த கருத்துக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சச்சிதானந் உப்சானே, மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்தே அவர் மீது சேற்றை வாரி இறைப்பது காங்கிரஸாரின் வழக்கமாக உள்ளது. பிரதமர் மோடி பற்றி கூறியதற்காக முதல்வர் பகெல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.