ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் நடந்த கடும் வாக்கு வாதம் : புதிய தகவல்

டில்லி

ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களும் உள்ளனர்.  இவர்கள் பல மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆவார்கள்.    சமீபத்தில் பிரதமர் மோடி பெரும்பாலான பொருட்கள் விரைவில் அதிகபட்சமாக உள்ள 28%லிருந்து 18% வரி விதிப்புக்கு மாற்றப் படும் என அறிவித்திருந்தார்.   ஆகையால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை அன்று டில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நடந்தது.   அப்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியை இழந்ததன் எதிரொலியாக காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆளும் மாநில அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பினர்.

அவர்கள் வரி விதிப்பு மாற்ற அறிவிப்புக்கு முன்பு ஜிஎஸ்டி வருமானம் குறித்த பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.    முன்பு அனைத்துப் பொருட்களுக்கும் அதிக பட்ச வரியான 18% விதிப்பதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொண்டதற்கு நேர்மாறாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.  சுமார் இரண்டு மணி நேரம் இந்த வாக்குவாதம் தொடர்ந்துள்ளது.

பிரதமர் மோடி அதிகபட்ச வரி விகிதமாக 18% இருக்கும் என அறிவித்ததற்கு மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.   ஜிஎஸ்டி கவுன்சிலின் அனுமதி இன்றி வரி விகிதம் பற்றி பிரதமர் தெரிவிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அசாம் மாநில நிதி அமைச்சர் அனைவரின் கருத்துக்களும் ஆவணமாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அதன் பிறகு உறுப்பினர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.   ஆனால் இதற்கு இரு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இறுதியாக 17 பொருட்களுக்கும் 6 சேவைகளுக்கும் வரி விதிப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.    ஆயினும் முக்கிய பொருளான சிமிண்ட் குறித்து முடிவு எடுக்கப்படாததால் அதன் வரி விகிதம் மாற்றப்படவில்லை.   அதன் பிறகு வரி வருமானம் மேலும் வளர்ந்ததும் சிமிண்ட் வரி விதிப்பு விகிதத்தை மாற்றலாம் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.