சென்னை: பட்டப் படிப்பை மேற்கொள்ளும் பட்டியலினத்‍தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளது தாட்கோ நிறுவனம்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்தான், தாட்கோ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், சாதாரண பட்டப்படிப்பு முதல் ஆய்வுப் படிப்பு வரை மேற்கொள்ளும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு, உள்நாடு என்றால் ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடு என்றால் ரூ.20 லட்சம் வரையிலும் கல்விக் கடன் வழங்கப்படும். அதேசமயம், இந்தக் கடனுக்கு 4.5% வட்டியும் வசூலிக்கப்படும்.
இதுகுறித்து தாட்கோ சார்பில் அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடன் விபரம், நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் குறித்த தகவல்களை, தாட்கோ அலுவலகங்கள் அல்லது தங்கள் கல்லுாரிகளிலேயே மாணாக்கர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.