அகமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில், மொத்தம் 18 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சாதன வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை, அம்மாநில துணை முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

மோடி மாடல் என்று வர்ணிக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் இந்த அவல நிலை, தற்போது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

குஜராத் மாநில துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சரான நிதின் படேல் சட்டசபையில் கூறியதாவது, “மொத்தம் 28 அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் வசதியில்லை அல்லது அவற்றில் அவை இயங்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில், வடோதரா மாவட்டத்தில் மட்டும் ஒரேயொரு சிடி ஸ்கேன் இயந்திரம் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல தனியார் மருத்துவமனைகளுடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, நோயாளிகளுக்கு தேவைப்படுகையில், அந்த தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ வசதிகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு, அரசின் சார்பில் அந்த மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்தப்படும்.

தற்போதைய கொரோனா பரவல் நெருக்கடியின்போது, மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில், ரேடியாலஜிஸ்ட்டுகள் போதுமான அளவில் இல்லை என்பதும் உணரப்பட்டுள்ளது. மேலும், அதுதொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு, தேவையான அளவில் விண்ணப்பங்களும் வருவதில்லை” என்றுள்ளார் துணை முதல்வர்.

அமெரிக்காவுக்கு சமமாக, பல மீடியாக்களால் விதந்தோதப்பட்ட குஜராத் மாநிலத்தின் அவலநிலை, அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் உள்ளது. தற்போது கொரோனாவை முன்னிட்டு, அம்மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பின் லட்சணம் தெள்ளத் தெளிவாக புலப்பட்டுள்ளது.