காஷ்மீர் : சுற்றுலப் பயணிகள் வருகை குறைவு : பலர் வேலையிழப்பு

ஸ்ரீநகர்

ழக்கமாக கோடை காலத்தில் பயணிகள் வருகையால் கலகலப்பாகும் காஷ்மீர் இப்போது வருவாரின்றி வெறிச்சோடி பல மக்கள் வேலையிழந்துள்ளனர்.

இது பற்றி பர்வேஸ் என்னும் செய்தியாளர் தெரிவித்ததாவது :

காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதாரம் சுற்றுலப் பயணிகளின் வருகையையொட்டியே அமையும்.  சென்ற 2016ஆம் வருடம் சுமார் 13 லட்சம் மக்கள் வருகை தந்தனர்.  இங்கு சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

மீடியாக்களில் காஷ்மீரில் வன்முறை தலை விரித்து ஆடுவதாக வரும் செய்திகளால் பயணிகள் காஷ்மீர் செல்ல மிகவும் அஞ்சுகிறார்கள்.   பொதுவாக தீவிரவாதிகளின் மறைமுகத் தாக்குதல் குறந்து விட்டதாக நம்பப் பட்டாலும் இன்றும் கல்லெறி நிகழ்வுகள் தினமும் காஷ்மீரில் எங்காவது ஓரிடத்தில் நிகழ்கிறது.  இவைகள் ஊரினுள், அதுவும் எந்த நேரத்திலும் நிகழ்கிறது.

காஷ்மீர் என்றாலே டால் ஏரியும் படகு வீடுகளுமே அனைவரின் நினைவில் தோன்றும்.  அந்த ஏரியில் இப்போது படகு வீடுகள் ஆளின்றி மிதக்கின்றன.   வழக்கமாக பயணிகள் அதில் தங்கி உலா வருவார்கள்.   ஆனால் இப்போது அதில் பயணம் செய்யவும் ஆட்கள் இன்றி படகோட்டிகள் காலிப் படகுடன் காத்திருக்கின்றனர்.   போன வருடம் தினம் குறைந்தது ரூ 1500 வரை சம்பாதித்தவர்கள் தற்போது ரூ 150 கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அதே போல கம்பளிப் போர்வைகள், ஸ்வெட்டர்கள் சாலையில் அமோகமாக விற்பனை ஆகும்.   இப்போதும் கடைகள் நிறைய இருக்கின்றன.  ஆனால் வாங்குவார் இல்லை.  கோடிக்கணக்கான மதிப்பில் உள்ள காஷ்மீர் கலைப் பொருட்களின் நிலையும் இதே தான்.

சென்ற வருடம் மக்கள் தங்க அறையின்றி தவித்த நிலையில் தற்போது விடுதிகளில் பல அறைகள் காலியாக உள்ளன.  அதே போல உணவகங்களும்.   கோடையில் மட்டும் இந்த விடுதி, மற்றும் உணவகங்களில் பலரை பணிக்கு அமர்த்துவது வழக்கம்.   ஆனால் வியாபாரம் இல்லாததால் பணியில் உள்ளவர்களையே இங்கு பணிநீக்கம் செய்துள்ளனர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் இந்த வருடம் மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 25000க்கும் குறைவாகவே உள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டுப் பயணிகளும் தற்போது காஷ்மீர் வர அஞ்சுவதாகவும் இந்த வருடம் சுமார் 5000 பேர் கூட வரவில்லை என்றும் கவலையுடன் கூறினார்.