பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டதால் சலசலப்பு! மத்திய அரசு விளக்கம்

டெல்லி:

ந்திய பாஸ்போர்ட்டில், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தாமரை, நம் நாட்டின் தேசிய மலர் என்பதாலும், புதிய பாஸ்போர்ட்டுகளில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில், புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில், தாமரை படம் அச்சிடப்பட்டுள்ள தாக தகவல் வெளியானது. இது குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ‘தாமரை, பா.ஜ.,வின் தேர்தல் சின்னம் என்பதால், பாஸ்போர்ட்டில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளது’ என  மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன் பிரச்சினை எழுப்பினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், அதுகுறித்து விளக்கம் அளித்தார்.அப்போது,

சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல் படி, பாஸ்போர்ட்டில் இந்த பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது.

தாமரை மட்டுமின்றி நாட்டின் தேசிய சின்னங்களான , தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்.  இப்போது தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வேறு தேசிய சின்னம் பயன்படுத்தப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.