மவுசு குறைந்த பல் மருத்துவப்படிப்பு: கலந்தாய்வு மேலும் 3 நாள் நீட்டிப்பு

--

சென்னை:

மிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வில், பல் மருத்துவத்துக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், மேலும் 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவ கல்விக் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மருத்துவக்கலந்தாய்வு கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது இதில், எம்.பி.பிஎஸ் படிப்புக்கான அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் உள்ள  3,968  இடங்கள்  நிரம்பி விட்டன.

ஆனால்,  பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் பல் மருத்துவப்படிப்புக்கு  1,070 இடங்கள் உள்ளன. இதில்,  நிர்வாக ஒதுக்கீட்டின் படி தனியார் கல்லூரிகளில் 852 மருத்துவ இடங்களும், 690 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களும் உள்ளன.

பொதுக் கலந்தாய்வு தொடங்கிய 3 நாள்களில் சென்னை  உள்பட 24 அரசு மருத்துவக் கல்லூரி களிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதும் நிரம்பி விட்டன. அதுபோல சென்னையில் உள்ள ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் எஞ்சியுள்ள மருத்துவ இடங்களில் சேர்வதற்காக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பல் மருத்துவம் படிக்க யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், ஏராளமான இடங்கள் காலியாகவே உள்ளது. இதை நிரப்பும் நோக்கில் மேலும் 3 நாட்கள் கலந்தாய்வை தமிழக அரசு நீட்டித்தது.

அதன்படி, நேற்று நடைபெற்ற கவுன்சிலிங்கிற்கு 6,698 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வெறும் 632 பேர் மட்டுமே வந்தனர். அவர்களில் 449 பேருக்கு பல்வேறு சுயநிதி பல் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

காலியாக உள்ள மீதமுள்ள பல் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை நிரம்பும் வகையில் மேலும் 3 நாட்கள் கவுன்சிலிங் நீட்டிக்கப்படுவதாக தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஜி செல்வராஜன் தெரிவித்து உள்ளார்.