குறைந்த வருவாய் வாங்கிய சமையல்காரர் நாட்டின் முன்னணி வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வினோதம்

 

திருவனந்தபுரம் :

நாட்டையே உலுக்கிய கேரள கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கில் 28 ஆண்டுகள் கழித்து கேரள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அபயா கொலைக்கு காரணமான பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம்.

1992-ம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவத்தின் போது அபயாவுக்கு வயது 19, இந்த கொலை வழக்கில் 49 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்திய வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடந்த வழக்கில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கொலைவழக்கில் சாட்சியம் அளித்தவர்களில் 8 பேர் முன்னுக்குப் பின்னாக பிறழ் சாட்சியம் அளித்திருந்தனர்.

ஹரிஷ் சால்வே

பொய் சாட்சி அளித்தவர்களில் முக்கியமானவர், அபயா தங்கியிருந்த பியஸ் கான்வென்ட் விடுதியில் சமையல் வேலை செய்துவந்த அச்சம்மா.

கொலை செய்யப்பட்ட அபயாவின் உடல் விடுதியின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில், சமையல் கூடத்தில் இவரை கொலை செய்ததற்கான தடயம் இருந்தது குறித்து அச்சம்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசிய அச்சம்மாவை உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.ஐ. அப்போது முடிவெடுத்தது.

சி.பி.ஐ. யின் இந்த உண்மை கண்டறியும் சோதனை முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அச்சம்மா, தனக்காக வாதாட, இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வே-வை நியமித்தார்.

இந்த வழக்கை நடத்துவதற்கு தேவையான பணத்தை பியஸ் கான்வென்ட் நிர்வாகம் செல்வழித்ததாக கூறிய அச்சம்மா, அதற்காக எவ்வளவு பணம் செலவானது என்பது தனக்கு தெரியாது என்று கூறியிருந்தார்.

குறைந்த வருவாய் ஈட்டிய சமையல் வேலை செய்யும் ஒருவர் அதிக பணம் செலவு செய்து நடத்திய வழக்கு இந்திய வரலாற்றில் இதுவாக தான் இருக்கும் என்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.