ஜி எஸ் டி குறைப்பால் ஓட்டல் உணவுகள் விலை உயரும் : அதிர்ச்சித் தகவல்!

வுகாத்தி

நேற்று ஓட்டல் உணவுகளுக்கு ஜி எஸ் டி குறைக்கப்பட்டுள்ள போதிலும் உணவுப் பண்டங்கள் விலை உயரும் என ஓட்டல் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று நடந்த ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் ஓட்டல் உணவுக்கான ஜி எஸ் டியை 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.   அதே நேரத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் ஏற்கனவே தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான செலுத்திய ஜி எஸ் டி யை  திரும்ப பெற முடியாது என அறிவித்துள்ளது.   இதற்கு காரணமாக அந்த திரும்பப் பெறக்கூடிய தொகையை வாடிக்கையாளர்களுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் பகிர்வதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   தங்களுக்கு தாங்கள் செலுத்திய ஜி எஸ் டி திரும்பக் கிடைக்கவில்லை எனில் அவர்களுக்கு உணவுப் பண்டங்களின் விலையை கூட்டுவதை தவிர வேறு வழி இருக்காது என தெரிவித்துள்ளனர்.   அதாவது ஒரு உணவுப் பண்டம் ரூ.500 என தற்போது இருப்பது 6% கூட்டப்பட்டு ரூ. 530 என விலை உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய வரி குறையும் எனவும் சொல்கின்றனர்.   அதாவது முதலில் 18% ஆக ஜி எஸ் டி இருந்ததால் ரூ. 500 மதிப்பிலான உணவுப் பண்டத்துக்கு வாடிக்கையாளர்கள் ரூ.590 செலுத்தி வந்தனர்.  தற்போது ஜி எஸ்டி 5% மட்டுமே விதிக்கப்படுவதால் பண்டத்தின் விலை ரூ.530 ஆக்கப்பட்டாலும் அதற்கு வரி ரூ. 26.50 தான் செலுத்த வேண்டி இருக்கும்.   எனவே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.556.50 ஆகத்தான் இருக்கும் என ஒரு ஓட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சில நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் இந்த விலை உயர்வு என்பது பெரிய ஓட்டல்களுக்கு மேலும் அதிகமாகும்.   அந்த உயர்வானது 10%க்கும் மேலே செல்லவும் வாய்ப்புள்ளதாகவும்  அப்படி விலை உயர்த்தப்பட்டால் வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகையில் அதிகம் மாறுதல் இருக்காது எனவும், அதனால் ஓட்டல் தொழில் மேலும் நலிவடையும் என தெரிவித்துள்ளனர்.   நட்சத்திர ஓட்டல்களுக்கு ஜி எஸ் டி திரும்பப் பெறக்கூடிய வசதியுடன் 18% வரி விகிதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.